"பொறுப்பை நிறைவேற்றி உள்ளார் ஸ்டாலின்" இரா.முத்தரசன் பேட்டி...!!

"பொறுப்பை நிறைவேற்றி உள்ளார் ஸ்டாலின்" இரா.முத்தரசன் பேட்டி...!!

"தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு யார் யாரை பொறுப்பில் அமர்த்த வேண்டும் அகற்ற வேண்டும் என்கிற பொறுப்பு உள்ளது. அதனை அவர் நிறைவேற்றி உள்ளார்" என இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை  மந்தைவெளியில் உள்ள ரயில் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கடைசி கட்ட நடைபயண இயக்கம்  நடைபெற்றது. இந்த இயக்கத்தினை அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறிய மோடி அரசு தற்போது வரை அநேக பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. 15 லட்சம் வரவு அனைவர் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று கூறிய மோடி அரசு வங்கிகளை அதானி, அம்பானி இருவருக்கும் தாரை வார்த்து கொடுத்து உள்ளது. மோடி அரசில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கவில்லை எனக்கூறினார்.

மேலும், பாஜக அரசு 23  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து உள்ளது எனவும் தொடர்ந்து பல்வேறு வகையில் மத வெறியை தூண்டி வருவதாகவும் சிறுபான்மை மக்கள் அகதிகள் போல அச்சத்தில் வாழ்வதாகவும் கூறினார்

தொடர்ந்து, பாஜக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர் விரோதமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை போன்ற பல்வேறு துறைகள் சுகந்திரமாக செயல்படாமல் பாஜகவினருடைய கட்டளையை கேட்டு செயல்படும் சூழல் உருவாகி உள்ளது என குற்றம் சாட்டிய அவர் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதாகவும் கூறினார். மேலும், கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதிலும் மக்கள் அதனை பெறமுடியாத அளவு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை பதவியில் இருந்து நீக்கியது  தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு யார் யாரை பொறுப்பில் அமர்த்த வேண்டும். அகற்ற வேண்டும் என்கிற பொறுப்பு உள்ளது. அதனை அவர் நிறைவேற்றி உள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க:அரசு நிரணயித்த விலை நியாயமான விலை இல்லை...உயர்நீதிமன்றம்!!