ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது...5 ஆண்டுகள் கூடுதலாக இயங்க அனுமதி!

ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது...5 ஆண்டுகள் கூடுதலாக இயங்க அனுமதி!

சென்னை ஸ்டான்லி  மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்லூரிகளில் போதிய அளவு மருத்துவர்களும், பேராசிரியர்களும் இல்லாததால், ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பல்வேறு கல்லூரி நிர்வாகங்கள் சரிவர பின்பற்றாமல் இருந்துவந்தனர். இதன் காரணமாக தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர் தமிழ்நாட்டில் அரசு ஸ்டான்லி கல்லூரி உள்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும், நாடு முழுவதும் 140 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. 

இதையும் படிக்க : ஒரே எண்ணை கொண்ட 2 வாகனங்கள்...பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு...அதிகாரிகள் சொல்வது என்ன?

இதனைத்தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையக் குழுவினரின் விதிகளின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்கும்படி மருத்துவக்கல்வி இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதியதாக 32 பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில்,  தேசிய மருத்துவ ஆணையக் குழுவினரின் விதிகளின்படி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும் பேராசிரியர் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்கு ஏதுவாக ரூ.6.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் மருத்துவக்கல்வி இயக்கம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, 32 புதிய பேராசிரியர்   பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு நிதி ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுடன் வழங்கப்படுவதாகவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஸ்டான்லி  மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டதாகவும், மேலும் 5 ஆண்டுகள் கல்லூரிகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு இல்லை என கூறிய அமைச்சர், மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வை மாநில அரசுகளே நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.