சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்...!

சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்...!


சேலம் மாவட்டம் எடப்பாடி நடராஜன் திருமண மஹாலில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது, மாநில தலைவர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கியது.அதேபோல் மாநில அரசும் வழங்க வேண்டும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலியிடங்களை நிரப்பிட வேண்டும், சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில்  சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம் .செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட தமிழக அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, திமுக அரசு எப்போதுமே சாலைப்பணியாளர்களின் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது எனவும், தங்களின் கோரிக்கை மனு குறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி இதற்கு  உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார். அதற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும், இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார் உட்பட  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.