"மத்திய கூட்டாட்சிக்கு மாநில சுயாட்சி முக்கியம்" -மு.க.ஸ்டாலின் 

"மத்திய கூட்டாட்சிக்கு மாநில சுயாட்சி முக்கியம்" -மு.க.ஸ்டாலின் 

மாநில அரசுகளுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு வழங்கும்போது தான் நாடு வளர்ச்சியடையும் எனவும் மத்திய கூட்டாட்சிக்கு மாநில சுயாட்சி முக்கியம் எனவும் பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை பல்லாவரத்தில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை அடர்த்திக் குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது எனக் கூறினார். சென்னை - மதுரவாயல் பறக்கும் பாலம் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுதல், சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக  மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். 

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக  விளங்கும் தமிழ்நாட்டுக்கு, ரயில்வேயில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார். ரயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததால், பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சென்னை கோயம்புத்தூர் வழித்தடம் உட்பட வந்தே பாரத் ரயில்களின் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்த அவர் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை உடனடியாக வழங்கமாறும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், மாநில அரசு செயல்படுத்தும்  திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தரும் போது தான் நாடு வளர்ச்சி அடையும் எனவும் மத்தியில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக மாநில அரசின் திட்டங்களையும் மாநில சுயாட்சி முக்கியத்துவத்தையும் பிரதமரிடம் எடுத்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.