வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் ஒன்று மற்றும் இரண்டாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

சென்னை கடலூர் நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்று மற்றும் இரண்டாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் ஒன்று மற்றும் இரண்டாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

வடமேற்கு மற்றும் அதன் ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து, தற்பொழுது புயலாக உருவாகியுள்ளது. மேலும் உருவாகிய புயலுக்கு  குல்-ஆப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புயல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் சுமார் ஐந்தரை மணியளவில் மையம் கொண்டதாகவும், ஒடிசாவின்  கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 370 கிமீ மற்றும், ஆந்திராவின் கிழக்கே 440 கி.மீ இடையே மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரைகளை கலிங்கப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே இன்று மாலைக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் எச்சரிக்கையாக சென்னை, கடலூர்,  நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்று மற்றும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.