வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கடுமையான கட்டுபாடு விதிப்பு...

வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கு தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கடுமையான கட்டுபாடு விதிப்பு...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அங்கு தடைவிதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடைவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கடற்கரையில் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத திருவிழா நாட்களில் இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளதால் வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கு தடைவிதித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். வேளாங்கண்ணியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், வார விடுமுறை நாட்களில் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள், தேரோட்டம் நடத்துதல், ஜெபகூட்டங்கள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.