ஆபத்தான நிலையில் தண்ணீரை கடந்து பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள்... 

விளாத்திக்குளம் அருகே பாலம் கட்டும் பணி 3 ஆண்டாக நிறைவு பெறாததால், இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

ஆபத்தான நிலையில் தண்ணீரை கடந்து பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள்... 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி அருங்குளம் பகுதியில் பாலம் கட்டும் பணி 3 ஆண்டாக நிறைவு பெறாத காரணத்தினால் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் பள்ளிக்கு மாணவ - மாணவிகள் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் பொது மக்களும் ஆபத்தான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பாலப்பணிகள் தாமதம் என்பதால் 108 ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று காடல்குடி பகுதியில் தரைப்பாலத்தினை தாண்டி தண்ணீர் செல்வதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாகனங்கள் பயணித்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி அருங்குளம், இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதி அகிலாண்டபுரம், ஸ்ரீரெங்கபுரம். இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அருங்குளத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் அருகே பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

மழைகாலங்களில் இப்பாதை வழியாக செல்வது சிரமம் என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் தற்பொழுது வரை அந்த பாலத்தின் பணிகள் முடியமால் உள்ளது. இதற்கிடையில் அப்பகுதியில் இருக்கும் பொதுபணித்துறைக்கு சொந்தமான கண்மாய் நீர் வெளியேறும் மதகு பகுதிகள் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கண்மாய்க்கு நீர் வரத்து வந்தாலும், மதகு பகுதி சரி செய்யப்படவில்லை என்பதால், நீர் தேங்கமால் முற்றிலுமாக வெளியேறி வருகிறது. இதனால் பொது மக்கள் அப்பகுதி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இப்பகுதியில் இருந்து வெளியே செல்வதற்கு இது தான் முக்கிய சாலை என்பதால் இப்பகுதியில் பொது மக்கள் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிவஞானபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் இடுப்பளவு நீரில் இறங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. நீரின் வேகம் அதிகரித்தால் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும், தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பாலபணிகள் தாமதம் காரணமாக 108 ஆம்புலன்ஸ் கூட இந்த பகுதிக்கு வர முடியாத நிலை இருப்பதாகவும், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் விளாத்திகுளம் அருகே உள்ள கடால்குடி - சுப்புலாபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்த காரணத்திhலும், மழைநீர் தரைப்பாலத்தினை தாண்டி செல்வதால் அப்பகுதியிலும் ஆபத்தான நிலையில் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. அப்பகுதிலும் பாலம் காட்டி தர வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.