1-8 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு... பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு...

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

1-8 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு... பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நீண்ட நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக, 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும், கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால், அடுத்தகட்டமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. கிட்டத்திட்ட 19 மாதங்களுக்கு பிறகு நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை வரவேற்க, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன. வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

உடைந்த இருக்கைகள், மேஜைகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை சரிசெய்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மீண்டும் வகுப்புகளுக்கு திரும்ப மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூர் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீண்டும் வருவதை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. பள்ளி நுழைவு வாயில்களில் வாழைமரங்கள் கட்டப்பட்டு, திருவிழா கோலம் பூண்டுள்ளது. மேலும், இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வரும் பள்ளி குழந்தைகளை வரவேற்க, இனிப்புகள் மற்றும் மேளதாளத்துடன் ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.