தண்ணீரில் மிதக்கும் அரசு விடுதி.... தவிக்கும் மாணவிகள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அரசு விடுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தண்ணீரில் மிதக்கும் அரசு விடுதி.... தவிக்கும் மாணவிகள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் திருச்சி செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.  அந்தப் பள்ளி அரசு மாணவியர் விடுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பள்ளிகளுக்கு சென்று படித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதிகளும் மூடப்பட்டன.

பின்னர் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவியர் விடுதி  திறக்கப்பட்டது. இதில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு விடுதியில் புதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 16 மாணவிகள் மட்டுமே தற்பொழுது விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர். விடுதியின் கேட்டின் முன்பு சுமார் 5 அடிக்கு மேல் அகலம் கொண்ட சுமார் 5 அடி ஆழமுள்ள கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.

இந்த நிலையில் இன்று பெய்த மழையின் காரணத்தால் கழிவுநீர் வாய்க்கால் அடைபட்டு கழிவு நீர் செல்லாததால் வாய்க்கால் நிரம்பி சுமார் 5 அடி அளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பி விடுதியின் முன்பு தேங்கி நிற்பதால் மாணவிகள் வெளியில் வரமுடியாத சூழலில் உள்ளனர்.

இதற்கு காரணம் பேரூராட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் மழைக்காலம் வருவதற்கு முன்பே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும்,  கழிவுநீர் வாய்க்கால் தூர் வாராத நிலையே சூழலுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.