சூப்பர் சரவணா ஸ்டோரில் நடந்த சோதனை.... ரூ. 1000 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிப்பு...!!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், சுமார் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சூப்பர் சரவணா ஸ்டோரில் நடந்த சோதனை.... ரூ. 1000 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிப்பு...!!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்குச் சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 37 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 1-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக சுமார் 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்து வந்தது தெரியவந்தது. மேலும் இந்த நிறுவனத்தினர் தங்களுக்குச் சொந்தமான துணிக்கடை மற்றும் நகைக்கடை நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களை சுமார் 150 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்கள் சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு போலி பில்கள் தயாரித்து அதன் மூலம் பெற்ற வருமானத்தை மறைத்து வருமானத்தைக் காட்டியதும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதேபோல கணக்கில் காட்டாமல் தங்கம் வாங்கியதற்கு உண்டான ஆவணங்களும் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியுள்ளது. மேலும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் ஸ்க்ராப் விற்பனை தொடர்பான ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், சோதனை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.