நாளை முதல் தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்!!

தமிழ் நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்  காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். 

இந்த நிலையில் அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. 

2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தி  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும்  சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வானதாக சபாநாயகருக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் 22 ஆம் தேதி அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை மீண்டும் சந்தித்து கடிதம் அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.