அருணாசல பிரதேசத்தில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர்...சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அருணாசல பிரதேசத்தில் பணியின்போது வீர மரணமடைந்த வடமதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

அருணாசல பிரதேசத்தில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர்...சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சடையப்பன். இவர், அருணாசலபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2 தினங்களுக்கு முன்பு சடையப்பன் சீன எல்லையான ஓரக் என்னுமிடத்தில் போபர்ஸ் பீரங்கி இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அங்கிருந்த குளிர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சக ராணுவ வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான வாலிசெட்டிபட்டிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் சடையப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே சடையப்பனின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். அவர் உடலின் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

அதன்பிறகு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சடையப்பனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது இறந்த சடையப்பனுக்கு பழனியம்மாள் (35) என்ற மனைவியும், ஹரிஹரன் (19) என்ற மகனும், பிரியங்கா (17) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது