தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பேசி தடுப்பூசியை பெற்று தர முன் வர வேண்டும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பேசி  தடுப்பூசியை பெற்று தர முன் வர வேண்டும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசின் செயல்பாடுகளை குறை கூறாமல் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பெற்று தர முன் வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வீடு தேடி சென்று விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 83லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் தினசரி சராசரியாக 61ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சராசரியாக 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாக கூறினார்.

தமிழகத்தை காட்டிலும் குஜராத் மாநிலத்திற்கு அதிகளவில் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டினார். தடுப்பூசி செலுத்துவதில் கோவை புறக்காணிக்கப்படுவதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சுப்ரமணியன், சென்னையை அடுத்து கோவையில்தான் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

அரசின் செயல்பாடுகளை குறை கூறாமல் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பெற்று தர முன் வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தடுப்பூசி செலுத்துவதில் திமுகவினர் தலையீடு இருந்தால் முதலமைச்சர் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.