காவிரி ஆற்றில் இறங்கி தமிழக விவசாயிகள் போராட்டம்!!

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஏராளமான விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அய்யாக்கண்ணு தலைமையில் காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரைப் பெற்றுத் தராத தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து சிந்தாமணி அண்ணா சிலை அருகில் 57 நாட்கள் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

58 வது நாள் போராட்டமாக இன்று காவிரி ஆற்றின் நடு பகுதியில் கழுத்தளவு நீரில் இறங்கி அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானவர் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் அன்பு மற்றும் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி உள்ளிட்ட போலீசார் நேரடியாக ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அங்கிருந்து அழைத்து வந்து கைது செய்தனர். விவசாயிகள் போராட்டத்தினால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.