ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு...!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 15-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்எஸ்ரவி ஒப்புதல் அளிக்கமால் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் ரகுபதி முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்படி மாநில பல்கலைக்கழங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளது.  

இந்நிலையில் மசோதாக்களை கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சட்டசபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில், ஆளுநர் ஆர்என்ரவி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனால் அரசு பணிகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்க்காரியா கமிசனின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாடுதல்களை வகுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர் என்ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.