காவிரி விவகாரம்; மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள்!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று சந்திக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடாததற்கு உண்மைக்கு புறம்பாக பல காரணங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம்  மனு கொடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் இன்று காலை 10 மணியளவில் டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறும் கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

டி.ஆர்.பாலு, தம்பிதுரை, ஜோதிமணி, திருமாவளவன், அன்புமணி, ஜிகே வாசன் உள்ளிட 12 எம்பிக்கள்  மத்திய அமைச்சரை சந்திக்கும் குழுவில் இடம்பெற்று உள்ளனர். 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. அதில் காவிரி நீர் பங்கீடு குறித்து அதிகாரிகள் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா