”தமிழகம் கடன் வாங்குவதில் நம்பர் 1-ஆக மாறியுள்ளது” - அண்ணாமலை

511 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வெறும் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றாமல் திமுக தத்தளித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ’என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, நேற்று 50 ஆவது நாளாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். 

ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, கடைவீதி, பட்டணம் சாலை, டிவிஎஸ் தெரு வழியாக சென்று இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் பயணம் நிறைவு பெற்றது. அப்போது வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவியும் மேள தாளங்கள் முழங்கியும் உற்சாக வரவேற்பளித்தனர். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம், VP துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய எல்.முருகன், என் மண் என் மக்கள் என்ற யாத்திரையானது மு.க. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பும் யாத்திரையாக இருக்க வேண்டும் என்றும், இந்த யாத்திரை ஊழல் திமுகவிற்கு எதிரான யாத்திரையாக திகழ்ந்து வருவதாகவும்கூறினார்.

பின்னர் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரும் மக்கள் கூட்டம் அரசியலுக்கானது அல்ல, அரசியல் மாற்றத்திற்காக வரும் கூட்டம் என்று கூறினார். இளைஞர்களை அரசியல் கவர்ந்துள்ளது என்றால் இந்த நடைபயணத்தின் மூலம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது இந்தியாவில் மூன்றாவது கடன் வாங்கும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு,  30 மாதங்கள் கழித்து அதிகமாக கடன் வாங்கும் மாநிலமாக உள்ளதாக கூறியவர், இது திமுக ஆட்சியின் வளர்ச்சியா என்று  எழுப்பினார். ஒரு பக்கம் கடன் வாங்கியதில் நம்பர் 1 ஆக உள்ள தமிழகம், மற்றொரு பக்கம் குடிகார மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.