வருமான வரி அதிகம் செலுத்துவதில் தமிழ்நாட்டிற்கு 4-ம் இடம்..!

வருமான வரி அதிகம் செலுத்துவதில் தமிழ்நாட்டிற்கு 4-ம் இடம்..!

இந்தியாவில் வருமான வரி அதிகம் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளதாக வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார். 

சென்னை எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருமான வரி செலுத்துவோர் வசதிக்காக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் அரங்கில் வருமான வரி துறையின் 164 வது தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு எளிய முறையில் அனைத்து வசதியையும் இணையதளத்தில் அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையில், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை, வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சுனில் மாத்தூர் துவக்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மேடையில் பேசிய போது:- 

நாட்டின் வளர்ச்சியில் வருமானவரித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், நாட்டின் வருமான வரி ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும் கூட, பல்வேறு சவால்களும் இந்த துறையில் நிறைந்திருப்பதாக தெரிவித்தார் . வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள், வருமானத்தை குறைத்துக் காட்டுபவர்கள், கணக்கில் மோசடிகளை செய்பவர்கள் என பல வகையான குற்றங்கள், வருமானவரித்துறைக்கு சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சனைகளை கண்டறிந்து, துறை மேம்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலகட்டத்தில் மிகுந்த பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். துல்லியமான கணக்கீடு , வருமான வரி வரம்பிற்குள் விடுபடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்தல், நிதி மேலாண்மை போன்ற அனைத்திலும் ஏ.ஐ., தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், எனவே இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை இந்த துறையில் படிப்படியாக அதிகரிக்கும் பட்சத்தில் துறையின் நிர்வாகம் மேம்பாடு அடையும் என்று தெரிவித்தார். 

இதற்காக சென்னை ஐஐடி  முடிந்த தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் காமகோடி  தெரிவித்தார்.


வருமானவரித்துறை முதன்மை ஆணையர் சுனில் மாத்தூர் மேடையில் பேசுகையில்:- 

"வருமானவரித்துறை 30 வருடங்களாக பல்வேறு வகையில் நல்ல  முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், தான் ஆணையராக பொறுப்பேற்பதற்கு முன்பு 30% பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வந்த நிலையில் தற்போது 60% ஆக உயர்ந்துள்ளது என்றார்.

இந்தியாவில் வருமான வரி அதிகம் செலுத்தும் மாநிலங்களில்,  மும்பை, பெங்களூரு, டில்லியை தொடர்ந்து தமிழகம் 4வது இடத்தில்
 உள்ளதாக தெரிவித்த அவர்,

நாட்டின் வளர்ச்சிக்கு இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஆதரவாகவும், செலுத்தாதவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த துறை செயல்பட்டு வருவதாக சுனில் மாத்தூர் தெரிவித்தார்.

இதையும்  படிக்க  | ஞானவாபி மசூதி தொல்லியல் ஆய்வு; உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!