டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்  : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்  : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து 3-01-2022 அன்று 1,728 ஆக அதிகரித்ததன் விளைவாக, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் 5-ம் தேதி விதிக்கப்பட்டன. ஆனால், டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை.

மேற்படி புதியக் கட்டுப்பாடுகள் அறிவித்த 5-ம் தேதி 4,862 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8-ம் தேதி 10,978 ஆக உயர்ந்தது. மூன்றே நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் மதுக்கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதித்து இருப்பதுதான். 

இதுகுறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில் அளித்த மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சர் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மதுபானக் கடைகள் திறந்தபோது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4.1 சதவீதம் என்றும் இந்த சதவீதம் அதிகரித்துக் கொண்டே சென்றது என்றும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் 5.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைந்தவிட்டதாகவும் பாதிப்பு இறங்குமுகத்தில் இருந்ததாகவும் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடிய மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி பார்த்தால் 1,39,253 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க வாதத்தின்படி பார்த்தால் எட்டு சதவீத பாதிப்பு உள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தீவிரமாகப் பரவும் நேரத்தில் மதுக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசுக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத் தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவாது.

மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும். தற்போதுள்ள 8 சதவீத பாதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும். பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துவருகிறது.

உச்சத்தை தவிர்க்க வேண்டுமெனில் தமிழ்நாட்டில் உடனடியாக மதுக்கடைகள் மூட உத்தரவிடுவதுதான் உத்தமமாக இருக்கும். அதை இந்த அரசு செய்யவேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் தாக்கம் ஐந்து சதவீதத்துக்கு கீழ் செல்லும் வரையில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.