11 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு வந்தன.  இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேலூர் பகுதிகளில் கிரானைட் எடுக்கப்பட்டதில் விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் பிஆர்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான ஒலம்பிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது

இதனை தொடர்ந்து கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012 செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கிரானைட் குவாரிகளை நடத்துவதற்கான ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் 30.10.2023 அன்று மாலை 04. 00 மணி வரை தமிழக அரசின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரால் வரவேற்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 31.10.2023 அன்று காலை 11.00 மணி முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டு டெண்டர் விண்ணப்பங்களை பிரித்து பரிசீலனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாதிரி விண்ணப்பப்படிவம், டெண்டர் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றின் விவரம் 3ஆம் தேதி வெளியான மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.04ல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல வண்ண கிரானைட் குவாரி டெண்டருடன் இணைந்த பொது ஏலம் தொடர்பான விவரங்களுக்கு :

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கூடுதல் கட்டிடம், 3வது தளத்தில் இயங்கிவரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.