125-வது மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்...!

125-வது மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்...!

உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். மலர் கண்காட்சியை பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமால் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த பகுதிகளுக்கு வருகை தருவது வழக்கம். 

அதன்படி, வாரத்தின் இறுதி நாளில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மூன்றாம் நாள் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சிகளை தொடர்ந்து கடந்த 19-ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. 

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், மயில், வரையாடு, புலி, சிறுத்தை, வண்ணத்துப்பூச்சி, செங்காந்தல் மலர் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட உருவங்களை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையும் படிக்க : மயிலை சித்ரவதை செய்து வீடியோ வெளியிட்ட இளைஞன்...வலைவீசி தேடும் போலீசார்!

இதேபோல், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனையொட்டி, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்கள் பொதுமக்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஏற்காட்டிற்கு படையெடுத்ததால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏற்காடு மலைப் பாதை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் அதிகாலை முதலே அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், முதலை பண்ணை, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல், நீர் வீழ்ச்சிகளை ரசிக்கவும், பரிசல் துறையில் படகு சவாரி செய்தும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோல், தமிழ்நாடு - கேரள எல்லையில் குமுளி அடுத்த தேக்கடியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏரியில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, குழந்தைகள் பெண்கள் என ஏராளமானோர் குடும்பத்துடன் இங்கு வருகை தந்தனர். படகு சவாரி செய்ய 255 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் படகு சவாரி செய்தனர்.