தூயபனிமயமாதா பேராலய 10-ம் நாள் பெருவிழா... திருப்பலியில் கலந்து கொள்ள முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்...

பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய 10-ம் நாள் பெருவிழா

தூயபனிமயமாதா பேராலய 10-ம் நாள் பெருவிழா... திருப்பலியில் கலந்து கொள்ள முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்...

நாட்டின் புகழ்மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். ஏழுகடல் துறை அடைக்கலத்தாய் என்று தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 439ம் ஆண்டுப் பெருவிழா இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியின் திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி கடந்த ஜூலை26 ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஜெபமாலை, மறையுரை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்த  நிலையில் ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான  இன்று கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பர கூட்டுத்திருப்பலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து ஆலய பங்குதந்தை குமார் ராஜா மறையுரை நிகழ்த்தினார். ஆலய நிகழ்ச்சிகளில் மறைமாவட்ட முதன்மை குரு, பங்குதந்தைகள், மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினந்தோறும் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது. பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைகாட்சியிலும், யூடியூப்பிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை நடைபெறும் பொன் மகுடம் தரித்த தூயபனிமயமாதாவின் திருவுருவ சப்பரப்பவனி கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஆலய வளாகத்தை சுறற்றிலும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தை பொறுத்தமட்டில் இத்திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் இஸ்லாமிய பெருமக்களும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.‌  மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.