தஞ்சாவூரில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு! முடிவில் கிடைத்த ஆவணங்கள் என்னென்ன?

தஞ்சாவூரில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு! முடிவில் கிடைத்த ஆவணங்கள் என்னென்ன?

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தஞ்சாவூரில் சோதனை நிறைவு பெற்றது. 

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பிரச்சாரத்தை தடுத்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு பாமக பிரமுகர்  ராமலிங்கம் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே பலரை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பக்ரூதீன், கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை முடிவுற்றது. சோதனையின் முடிவில் டைரிகள், ஆவணங்கள்  மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க : தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

இதேபோல், கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் அவரது வீட்டிலிருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் பீமாநகர், பண்டரிநாதபுரம் பகுதியில் ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பி.எஃப்.ஐ அமைப்பில் இருந்த அப்சல் கான் என்பவரது வீட்டிலும்  பலத்த பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட தேரிழந்தூர் பட்டகால் தெருவில் வசிக்கும் நிஷார் அகமது என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.