ஆவின் பால்பாக்கெட்டில் “செஸ் தம்பி” புகைப்படம்...!

ஆவின் பால்பாக்கெட்டில் “செஸ் தம்பி” புகைப்படம்...!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலபடுத்தும் வகையில் தமிழக அரசு பல வழிகளில் முயற்சித்து வருகிறது....

செஸ் ஒலிம்பியாட்:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னையடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, அங்கு நிலவும் போரால் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் முதன்முறையாக நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

வீரர்கள் வருகை:

இந்தப் போட்டியில் சுமார் 200 நாடுகளிலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்கின்றனர். இநிலையில் வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வருகை தரும் நிலையில், அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகிறது.

உள்ளூர் விடுமுறை:

சென்னையடுத்த மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டை பிரபலபடுத்தும் தமிழக அரசு:

1. செஸ் தம்பி:

வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமிழக அரசு  ஈடுபட்டு வருகிறது.  அதன் முதற்கட்டமாக “செஸ் தம்பி” என்று பெயரிடப்பட்ட சின்னத்தை அறிமுகப்படுத்தினர். குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அமைந்திருக்கும் இந்த சின்னத்தை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் இடங்களில் ஆங்காங்கே வைத்திருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

2. “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” பாடல்: 

அடுத்த கட்டமாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும்  “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” என்ற பாடலை உருவாக்கி பிரபலப்படுத்தினர். அந்த பாடல் சென்னை மாநகரின் பிரசித்தியான நேப்பியர் பாலத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. 

3. ஆவின் பால்பாக்கெட்:

இந்நிலையில் திரும்பிய இடமெல்லாம் செஸ் ஒலிம்பியாட் சின்னமான ’செஸ் தம்பி’ காட்சியளிக்கும் வகையில் தற்போது, ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் இடம்பிடித்துள்ளது. ”நம்ம சென்னை, நம்ம செஸ்” என்ற வாசகத்துடன், தம்பி சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள ஆவின் பால் பாக்கெட்டுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

முதலில் எல்லாம் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டும் ஆவில் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்து வந்த நிலையில், தற்போது 44ஆவது சதுரங்க போட்டியை முன்னிட்டு ”செஸ் தம்பி” விளம்பரம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழக அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.