கீழடியில் நடைபெறும் 8-ஆம் கட்ட அகழாய்வு.. 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு!!

கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் போது, 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் நடைபெறும் 8-ஆம் கட்ட அகழாய்வு.. 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு!!

தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 8 குழிகளும், அகரத்தில் 6 குழிகளும், கொந்தகையில் 4 குழிகளும் தோண்டப்பட்டு 800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் கொந்தகையில் 54 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. இதில் ஒருசில தாழிகள் தவிர மற்றவை சேதமடைந்த நிலையிலேயே கிடைத்தன. இவற்றை மரபணு சோதனைக்கு உட்படுத்த தொல்லியல் துறை முடிவு செய்தது.

அதன்படி, தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் 114-வது தாழி திறக்கப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த தாழியில் இருந்து மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.

இவை மரபணு பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படுகிறது. முன்னதாக, கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.