"மாணவர்களின் கல்வியை சீரழிக்க மத்திய அரசு முயற்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!

தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை சீரழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் கந்தனேரியில் திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விழாவில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு உள்பட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் முதல் நிகழ்வாக, முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மயிலாடுதுறை சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் சுந்தரத்திற்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு  ராமசாமிக்கு பேராசிரியர் அன்பழகன் விருது ஆகிய 5 விருதுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். 

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர வேட்கையை முதலில் விதைத்தது வேலூர் நகரம் தான், எனக் கூறினார். மாநில உரிமைகளை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக  அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஜிஎஸ்டி என்ற வரியை கொண்டு வந்து மாநில வருவாயை முடக்கி விட்டதாகவும் சாடினார். 

மத்தியில் ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் பாஜக நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஏழரை லட்சம் கோடி ஊழலை மறைக்க சனாதன பேச்சை திரித்து பாஜக கூறுவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகளை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக  அரசு செயல்படுகிறது எனவும், பாஜகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40  தொகுதிகளை  கைப்பற்ற உறுதி ஏற்க வேண்டும் என்றும் திமுக தொண்டர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா