பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடலூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 34 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஒரு புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

அத்துடன், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.  மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 50 கோடி ருபாய் மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். 

இதையும் படிக்க : புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறதா மழைக்கால கூட்டத்தொடர்?

இதேபோன்று, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், "தமிழ் மண்வளம்"  என்ற புதிய இணைய முகப்பினை தொடங்கி வைத்தார். அத்துடன், பனையின் சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்,  "நெட்டே நெட்டே பனைமரமே" என்ற காலப்பேழை நூலையும் முதலமைச்சர் வெளியிட்டார். 

மேலும், 68 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.