'மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி' : " முதலமைச்சர் கூறுவது சரியே.." - செல்லூர் ராஜூ.

'மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி'  : " முதலமைச்சர் கூறுவது சரியே.." - செல்லூர் ராஜூ.

 மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரி தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் கீழமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்:- 

இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது. எனவே கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்றும், மாநிலத்தில் 'செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி' என முதலமைச்சர் சொல்வது சரி தான் எனவும் கூறியுள்ளார். 

மேலும், "தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா கூறியதாகவும், 2014ல் லேடியா மோடியா என ஜெயலலிதா கேட்ட போது அவருக்கே மக்கள் வாக்களித்தனர்.
அதுபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்", என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், " அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான்", என்று கூறியவர், "எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது",  என்றும் உறுதியாக கூறினார். 

அதனையடுத்து, நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை பற்றி பேசுகையில், 

" அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?,  ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை,  13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். யார் யாரோ  தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? என வினவியதோடு, அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெறிவித்தார். 

மேலும், " விஜய்  எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான். மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா?. அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார்",  என செல்லூர் ராஜு கூறினார். 

இதையும் படிக்க     | ஆந்திரா போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலில் சிக்கி பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு பழங்குடியினர்!!