சட்டம் ஒழுங்கு பிரச்சினை; இன்று நேரில் ஆய்வை தொடங்கும் முதலமைச்சர்!

சட்டம் ஒழுங்கு பிரச்சினை; இன்று நேரில் ஆய்வை தொடங்கும் முதலமைச்சர்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஆய்வு செய்யவும், வளர்ச்சி திட்டப் பணிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஆய்வுக் கூட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிலையத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் விவாதிக்கப்படுகிறது. 

இதையொட்டி மறைமலைநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுக வரவேற்பு கொடுக்க திமுக நிா்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனா்.  மேலும் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிக்க: "அரசியல் நாடகங்களை திமுக அரங்கேற்றுகிறது" திமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்!!