நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்; நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்; நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னைக்கு அருகே போதிய நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால், சென்னை பெருநகரம் வடகிழக்கு பருவமழையை பெரிதும் சார்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட கால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றன.

நெம்மேலியில் 805 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் 2010ம் அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில் நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 இலட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, நெம்மேலியில்,  நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக பணிகள் கடந்த பல மாதங்களாக துரிதமாக நடைபெற்று பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்.  

இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீர், உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசன்பேட்டை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதியில் உள்ள சுமார் 9 இலட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி" அமைச்சர் இராஜகண்ணப்பன் பேச்சு!