மாதாந்திர மின் கட்டண முறை எப்போது..? வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்...

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த  வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது..? வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்...

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகமான மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததை குறிப்பிட்டுள்ளார். தற்போது, உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்சார துறை அமைச்சர் கூறியிருப்பது, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற அறிவிப்புகளின் வரிசையில் இதுவும் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கை, வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் எனவும், இந்த மக்கள் விரோத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும்  ஓ.பி.எஸ். கூறியுள்ளார். கொரோனா தொற்று, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ள நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை அரசு செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருப்பதாக கூறியுள்ள ஓ.பி.எஸ்., மக்களின் எதிர்பார்ப்பினை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.