நீதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் சசிகலா தொடர்ந்து அவமதிக்கிறார்..ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!

இந்திய நீதித் துறையையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் சசிகலா தொடர்ந்து அவமதித்து வருவதாக அதிமுக அமைப்பு செயலாளர்  ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் சசிகலா தொடர்ந்து அவமதிக்கிறார்..ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!

அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க, மாம்பலம் காவல் நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் டி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா பேசி வருவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சசிகலா மீது இந்திய தண்டனை சட்டம் 420, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல் துறைக்கு அறிவுறுத்துமாறு, தான் தாக்கல் செய்த வழக்கில் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நிர்வாகிகள் என்று டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என சசிகலா தொடர்ந்து தன்னை பிரகடனப்படுத்தி வருவது,  ஒரு ஏமாற்றும் செயல் என கூறினார்.

நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்ப்பை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இந்திய நீதித்துறையை அவர் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். 


மேலும் சட்டப்பேரவையில் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு காரணம் தெரிவித்ததை ஜெயக்குமார் மறுத்துள்ளார். சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் ஏவையும், எவ்வளவு சுகாதாரமான அடிப்படையில் தொடங்கப்பட்டன என்பதை காண்பிக்க நான் தயார் என்றும், என்னுடன் சுகாதாரத்துறை அமைச்சர் வந்து பார்வையிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும்பொழுது, சசிகலாவுக்கு திமுக ஆதரவாக இருப்பதையே காண்பிக்கிறது என்றும் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதில் திமுகவினருக்கு கைவந்த கலை என்றும் அவர் விளக்கமளித்தார்.


வாய்மையே வெல்லும் என்ற வரிகளுக்கு இணங்க தமிழகத்தில் ஆட்சி நடந்து வந்த நிலையில், தற்போது பொய்மையே வெல்லும் என்ற வாசகத்திற்கு ஏற்ப திமுக ஆட்சி நடத்தி வருவதாக கூறினார். பொங்கல் பண்டிகைக்காக நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமே வடமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட பொருட்கள் என்றும், தமிழகத்தில் தரமான பொருட்கள் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நியாயவிலை கடைகளில் மக்கள் திமுக அரசை விமர்சிப்பது குறித்து, மு க ஸ்டாலின் மாறுவேடத்தில் சென்று கேட்டால் தமிழக அரசின் உண்மை நிலை என்ன என்று அவருக்கு புரியும் என்றும் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.