மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கிய தலைமை ஆசிரியர்...!

மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கிய தலைமை ஆசிரியர்...!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தனது சொந்த செலவில் வாகனம் வாங்கி இயக்கி வரும் தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர். 

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பொன் பால்துரை, எட்டு மாணவர்கள் மட்டுமே இருந்த தனது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை 93 ஆக உயர்த்தினார். ஏற்கனவே மூன்று ஆசிரியர்கள் உள்ள நிலையில், தனது சொந்த செலவில் கூடுதலாக 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளார். இது தவிர தனியார் பள்ளிக்கு நிகராக சீருடை, ஷூ, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.

இதையும் படிக்க : மதுரை நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டாமல் ஏன் தந்தை பெயர் சூட்டினார் - ஜெயக்குமார் கேள்வி

இதற்கிடையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் போக்குவரத்து வசதியில்லாமல் இருக்கும் ஓடைப்பட்டி, உசிலம்பட்டி, கட்டானிபட்டி, வடவன்பட்டி, கல்லம்பட்டி, மல்லிப்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து வரும்  மாணவர்கள்  பள்ளிக்கு வந்து செல்ல சிரமப்பட்டனர்.

இந்நிலையில் தொலைவில் இருந்து வரும் மாணவர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக தனது சொந்த செலவில் வாகனம் வாங்கி, அதனை  தானே இயக்கியும் வருகிறார். அதன்படி, மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் வீட்டில் விடவும் முடிவு செய்துள்ளார். தலைமை ஆசிரியரின்  இந்த நற்செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.