"வாச்சாத்தி சம்பவத்தில் அரசு, தவறிழைத்த அதிகாரிகளை காக்கவே முற்பட்டது" உயர்நீதிமன்றம் கண்டனம்!

வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத அப்போதைய அரசு,   தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாக  சென்னை உயர் நீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ விசாரிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி வேல்முருகன், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்ற போதிலும், அவர்கள் தங்கள் வரம்பை மீறி, இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த செயல் அலுவல் ரீதியான பணியல்ல என்பதால், வழக்கு தொடர்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தினரின் சொத்துக்களை மட்டுமல்லாமல், கால்நடைகள் கோழிகளை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் திருடிச் சென்றிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இது அலுவல் ரீதியான பணி அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார்.

விசாரணை நீதிமன்றம் அனைத்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆராய்ந்து தான் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கும் நிலையில், அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதத்தை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாச்சாத்தி பகுதியில் சில பெரும் புள்ளிகள் சந்தன கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சந்தன கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 18 இளம் பெண்களும், நீதிமன்ற காவலில் வைப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தாங்கள் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டது குறித்து  தெரிவிக்கவில்லை என்ற வாதத்தை மனுதாரர்கள் முன் வைத்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, காவல்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மிரட்டல் காரணமாகவே அந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூறவில்லை என்ற போதும், பிறகு பாதுகாப்பாக உணர்ந்ததால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சாட்சியம் அளித்துள்ளதாக, நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார்.

 அதனால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற மேல்முறையீட்டுக்காரர்கள் வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார். 13 வயது சிறுமியையும், 8 மாத  கர்ப்பிணியையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், சந்தன கடத்தல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டை கிராமத்தினர் கூறி இருக்கிறார்கள் என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தன கட்டைகளை தேடுவதற்காக 18 பெண்களை அழைத்துச் சென்ற போது, பெண் காவலர் இருந்தும், அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்பதிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 18 பெண்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டியிருக்கிறார்கள் என்பதை உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, பொய் வழக்கு என கூறி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி வேல்முருகன், தங்கள் தவறை மூடி மறைப்பதற்காகவே கிராமத்தினருக்கு எதிராக சந்தன கடத்தல் வழக்குகளை அதிகாரிகள் பதிவு செய்திருப்பதும் தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கூட, மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட வன அதிகாரியோ, காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில், அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய அரசு, பழங்குடியின பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டவில்லை எனவும், மாறாக தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாகவும் கடும் கண்டனத்தை நீதிபதி வேல்முருகன் பதிவுசெய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அப்பாவி இளம் பழங்குடியின பெண்களின் வலியை தகுந்த இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டுமே ஈடுகட்ட முடியும் என குறிப்பிட்டு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதில் 50 சதவீத தொகையை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப்பட்ட 17 பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு அல்லது சுய வேலை வாய்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், வாச்சாத்தி கிராமத்துக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும்  நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் தண்டனை காலத்தை அனுபவிக்கும் வகையில் அவர்களை கைது செய்வதற்கு தர்மபுரி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!