சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு உடற்கூறாய்வு முடிந்தது..!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடல் இரண்டாவது முறையாக இன்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் உருவபொம்மையை மாடியிலிருந்து வீசியும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு உடற்கூறாய்வு முடிந்தது..!

மாணவி உயிரிழப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூர் என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. மாணவியை இறப்பில் சந்தேகமடைந்த பெற்றோர், பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடம்பில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தலையில் மட்டுமே அடிபட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 

மாணவியின் உடல் வாங்க மறுப்பு :

தங்களது மகள் மரணத்தில் சந்தேகம் விலகும் வரை உடலை பெற மாட்டோம் என கூறிய பெற்றோர், உறவினர், மாணவர் சங்கத்தினர் என பல தரப்பினரும் அந்த பள்ளி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகளை டிராக்டர் வைத்து இடிப்பதும், தீ வைப்பதும், பள்ளி வளாகத்தில் நுழைந்து வகுப்பறைகளுக்கு தீ வைப்பதும், மாற்றுச் சான்றிதழ்களை தீயிட்டு கொளுத்துவதுமாக செய்து வந்தனர். மேலும் கோபமடைந்த போராட்டக்காரர்கள், காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கவும் செய்தனர். அதனால் அப்பகுதிக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

பள்ளியின் மீது நடவடிக்கை: 

மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதி இருந்தார் என கூறப்பட்ட அந்த கடிதம் நேற்று (18.7.2022) வெளியானது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

பெற்றோர் கோரிக்கை :  

மாணவியின் பெற்றோர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் மாணவியின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்து அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். டிஜிபி தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


மறு உடற்கூறு ஆய்வு கோரிக்கை : 

மாணவியின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று மறு உடற்கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் உடற்கூறு ஆய்வு நடத்த 3 அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. எனினும் தங்கள் தரப்பு மருத்துவர் தலைமையில் உடற்கூராய்வு நடத்த வேண்டுமென பெற்றோர் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க கோரியும் மாணவியின் தந்தை  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மறு உடற்கூறு ஆய்வு : 

இந்நிலையில் உடற்கூறு ஆய்வில் மாணவியின் பெற்றோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாணவியின் வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. மாணவியின் பெற்றோர் கலந்து கொள்ளாத நிலையில், மருத்துவர்கள் உடற்கூராய்வை நிறைவு செய்தனர். இதேபோல மாணவியின் உருவ பொம்மையை, மாடியில் இருந்து வீசி சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மாணவி குதித்தாகக் கூறப்படும் பள்ளிக் கட்டிட மாடியில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.