"மகளிர் உரிமைத்தொகை திட்டம் சிறப்பானது" - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள் தொடங்கி வைத்தனர். 

அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி பேசினார். அப்போது,  எந்த திட்டம் செயல்படுத்தினாலும் எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்றார். 

இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.
அப்போது  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : திருவாரூரில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுடெடுப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர் கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். 

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பயனாளி ஒருவர் மேடையின் அருகே தற்காலிக ஏடிஎம் மையத்தின் மூலம் பணம் எடுத்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

இதேபோன்று அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை வழங்கினர்.