நடிகர் ஆர்யா போல் நடித்து இளம் பெண்ணிடம் மோசடி

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம் பெண்ணிடம் பணம் பறித்த மோசடி கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம் பெண்ணிடம் மோசடி

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவை போலீசார் நேரில் வரவழைத்து விசாரித்தனர். இதில், நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யா போன்று சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபர் தான் ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் பேசி வந்ததும், நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர், ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேட் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.