கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்...!

நாகை அருகே திருக்குவளை பகுதியில் பெய்த திடீர் கனமழையால் வலிவலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அவதி

கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்...!

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது முன் பட்டத்தில் குறுவை சாகுபடி காண அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பெய்த மழையால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கொள்முதல் திறப்பினை எதிர்நோக்கி நெல் மூட்டைகளுடன் காத்திருந்த பெரும்பாலான விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது. குறிப்பாக வலிவலம் பகுதியில் திடீரென பெய்த மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர வைப்பதற்காக வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்தது. விவசாயிகள் தார்ப்பாய் கொண்டு தங்களது நெல்லை பாதுக்காக்க முயன்றும் மழை நீர் உட்புகுந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. 

சுமார் 3500 க்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்காக இங்கே விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நிலையில் இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. ஆகவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், குறிப்பாக இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு இல்லாத நிலையில் நெல்மணிகள் மழையில் நனைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.