ஆவின் பால் வினியோகம் பாதிப்பு... மக்கள் அவதி!

ஆவின் பால் வினியோகம் பாதிப்பு... மக்கள் அவதி!

சோழிங்கநல்லூரில் ஆவினில் மீண்டும் பால் விநியோகம் தாமதம் ஆனதால் பொதுமக்கள் ஆவின் பால் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் புதிய ஒப்பந்த நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளதால் பால் பாக்கெட்களை வாகனங்களில் ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பால் விநியோகம் கடந்த 3 நாட்களாக தாமதமாக செல்வதால் பொதுமக்கள் பால் பாக்கெட் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக திருவல்லிக்கேணி, வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் காலை 8 மணிவரி  6 வாகனங்களுக்கு பால் ஏற்றாமல் நின்றதால் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் விநியோகம் தாமதம் பிரச்சனைக்கு முக்கிய காரணம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் போதிய அளவில் வராமல் இருப்பது தான் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் ஏற்றுவது, பால் பாக்கெட் எடுத்து செல்லும் பாக்ஸ் கழுவுவது, பால் பாக்கெட் அடுக்குவது போன்ற வேலைகளை செய்ய ஆட்கள் குறைவாக உள்ளதாகவும், வாகன ஓட்டுனர்கள் பால் பாக்கெட் ஏற்றும் பணியை செய்யும் நிலை அங்கு நிலவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பால் வண்டி ஓட்டுநர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!