மதுபோதையில் அட்டகாசம்... காவல்நிலையத்திற்குள் புகுந்து ரகளை ... வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்

தென்காசி அருகே மதுபோதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுபோதையில் அட்டகாசம்... காவல்நிலையத்திற்குள் புகுந்து ரகளை ... வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேந்தவர்கள் ராமசாமி , மாரியம்மாள் தம்பதியினர். குழந்தை இல்லாததால் 2 வருடம் முன்பு அஜித் குமார் (21) என்பவரை தத்தெடுத்து வளர்தனர். குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அஜித்குமார் கொடுத்த தொல்லையால் பெற்றோர் விஷம் குடித்து பலியாகினர் என அனைவராலும் மற்றும் இறந்தவர்கள் கைப்பட எழுதிய டைரியில் கூறப்பட்டது. இது தொடர்பாக பாப்பாகுடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அஜித்குமார் குடிபோதையில் ஆலங்குளம் காவல் நிலையம் உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டார். குடிபோதையில் நுழைந்த அவரை காவல்துறையினர் உள்ளே விடாமல் வெளியே வைத்து பேசி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அஜித்குமார் காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ மற்றும் போலீசாரையும் தர குறைவாகவும் கேலி, கிண்டல் செய்து மிரட்டவும் செய்துள்ளார். காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் மீது மோதி சாலையின் குறுக்கே தள்ளாடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி சாலையில் சென்றவர்களையும் வந்தவர்களையும் வம்புக்கு இழுத்து அவர் செய்த ரகளை காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆலங்குளம் காவல் நிலைய வளாகத்தில் இத்தனை கேலிகளும் குடிமகன் ஒருவனால் அரங்கேற்றப்பட்டது. பின்பு அங்கிருந்து அவனை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டு வந்த போலீசார் நேற்று அவனை லாகவமாக தூக்கிவந்தனர். தெருவில் சென்றவரை வழிமறித்து பணம் பறிப்பு மற்றும் தெருக்களில் தகராறில் ஈடுபட்டதாக செல்வராஜ் என்பவர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார், அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.