விவசாயியை சுட்டுக்கொன்ற வனத்துறையினர்; தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வேலைக்கு சென்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர், அவரது தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து வனத்துறையினர் இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், உடலை காடா விளக்கு பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவலறிந்த உறவினர்கள் இறந்தவரின் உடலை பார்க்க சென்ற போது பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து உறவினர்கள்,  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் போரட்டாம் நடத்தினர். அப்போது மாவட்ட காவல் துறை ஏஎஸ்பி மீனாகுமாரி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில், சிலர் வாக்குவாதத்தில் செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் ஈஸ்வரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது. ஆனால்  வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காத வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; தீவிர கண்காணிப்பில் தமிழக போலீசார்!