அரிசி ஆலை உரிமையாளரின் மகனை கடத்திய கும்பல்- 3 பேர் கைது....

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகனை  3 கோடி கொடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளரின் மகனை கடத்திய கும்பல்- 3 பேர் கைது....

காங்கேயம் அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அரிசி ஆலை நடத்தி வரும் இவர், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி அப்பகுதியில் பெரும் தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பாப்பினி அருகே புதிதாக கட்டப்பட்ட தங்களின் அரிசி ஆலையை பார்வையிடுவதற்காக ஈஸ்வரமூர்த்தியின் மகன் சிவபிரதீப் சென்ற போது 7 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்து அவரை  கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தியை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த தந்தை, மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி பணத்தை கொடுத்து மீட்டுள்ளார். மகனை பத்திரமாக மீட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறையிடம் தந்தை ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டி.எஸ்.பி. குமரேசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை மதுரையில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் கடத்தல் கும்பலிடம் இருந்து இதுவரை ஒன்றரை கோடி மீட்ட போலீசார், தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.