விலை உயர்வு தொடர்ந்தால்...நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தயார்...அமைச்சர் அறிவிப்பு!

விலை உயர்வு தொடர்ந்தால்...நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தயார்...அமைச்சர் அறிவிப்பு!

விலை உயர்வு தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு தயாராக உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த 26 ஆம் தேதி கிலோ 100 ரூபாயைக் கடந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி  தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை  நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். 

இதையும் படிக்க : மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்...முதலமைச்சர் ட்வீட்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ள தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியதன் பேரில், 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதாக கூறினார். தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பண்ணைப் பசுமைக் கடைகளுக்கு வழக்கத்தை விட 15 சதவீதம் அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தக்காளியின் விலை உயர்வு தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு தயாராக உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.