காட்டுமிராண்டித்தனங்களை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - சசிகலா ஆவேசம்...

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விகே சசிகலா தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 

காட்டுமிராண்டித்தனங்களை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - சசிகலா ஆவேசம்...

அரசு பேருந்துகளில் கண்டக்டர் மற்றும் டிரைவர்களால் சர்ச்சைகளும், பரபரப்புகளும் கூடி வருகின்றன. குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் குளச்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பஸ் கண்டக்டர் அவரை இறக்கிவிட்டார். இதுதொடர்பாக வீடியோ சமூக சோஷியல் மீடியாவில் பரவி, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதேபோல வடசேரியில், நரிக்குறவர் தம்பதியினர் பஸ்ஸில் சண்டை போட்டு கொண்டதற்காக அவர்களையும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் அந்த பஸ்ஸின் கண்டக்டர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதேபோல இன்னொரு சம்பவமும் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் அருகிலுள்ளது கோனூர் என்ற கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள ஒரு தனியார் காலேஜில் கணிதம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பயணம் 4 நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் புது ஸ்டாண்டிற்கு வந்த இவர், சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பஸ்ஸிலும் ஏறினார். பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றபோது, அந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாரும் இறங்கிவிட்ட நிலையில், மாணவி மட்டும் தனியாக பயணம் செய்தார்.

இரவு 7. 15 மணி அளவில், மாணவி தனியாக உட்கார்ந்திருப்பதை கவனித்த கண்டக்டர் சிலம்பரசன், பஸ் ஓட்டுவதை விட்டுவிட்டு, மாணவியின் அருகில் வந்து உட்கார்ந்து பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளார். மாணவி இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு தகராறு செய்ததுடன், போலீசில் புகார் தந்தார். இது தொடர்பாக கண்டக்டர் சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். இப்படி ஒரே வாரத்தில் அரசு பஸ்களில் சர்ச்சைகளும் பரபரப்புகளும் நிகழ்ந்தது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை தந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் விகே சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி உள்ளதாவது: 

மனித உரிமைமீறல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நரிக்குறவர் சோமி குடும்பத்தினரை அரசு பேருந்தில் இருந்து ஈவு, இரக்கமின்றி இறக்கிவிட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும், இவர் ஒரு மாற்றுத்திறனாளியாகவும் இருக்கிறார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காக பேருந்தில் இருந்து இறக்கிவிடலாமா? இது ஒரு மனித உரிமை மீறல் செயல் ஆகும். குளச்சல் இதேபோன்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக தான், செல்வமேரி என்ற மீனவ பெண் ஒருவரை குளச்சல் பேருந்து நிலையில், பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் நடந்தேறியது. 

அதேபோல் 2 நாட்களுக்கு முன் விழுப்புரத்தில் ஓடும் அரசு பேருந்தில், கல்லூரி மாணவிக்கு பேருந்தின் நடத்துனரே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு அந்த பேருந்தின் ஓட்டுனரும் உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்றதொரு, காட்டுமிராண்டித்தனத்தை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்காமல், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனர் அரசு பேருந்தில் நடத்துனராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவது என்பது பொதுமக்களுக்கு ஆற்றுகின்ற தன்னலமற்ற ஒரு சேவையாகும். எத்தனையோ பேர் சிறப்பாக சேவை மனப்பான்மையோடு பணியாற்றுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு சிலர் செய்கின்ற தவறுகளால் அனைவரையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. சிரமங்கள் அரசு பேருந்துகளில் பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பணிகளில் எத்தனையோ சிரமங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை, எளியவர்களை கனிவோடும், உரிய மரியாதை அளித்தும் நடத்த வேண்டும். இதுபோன்று தவறு செய்பவர்களை கண்டறிந்து, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள், அரசு பேருந்துகளில் அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் செய்கின்ற நிலையை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.