ஆளுநர் மாளிகையை கையகபடுத்தி புதிய  சட்டமன்றம் -துரைமுருகன்...!!

ஆளுநர் மாளிகையை கையகபடுத்தி புதிய  சட்டமன்றம் -துரைமுருகன்...!!

ஆளுநர் மாளிகையை கையகபடுத்தி தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதிய சட்டமன்றம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடந்தது. இதில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், ''விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை நானும் வேண்டுகிறேன்'' எனவும் விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார் எனவும் தெரிவித்தார். 

கேரளா, ஆந்திராவில் உள்ள சட்டமன்றங்களை சுட்டிக்காட்டிய துரைமுருகன் அதுபோல இங்கும் புதிய சட்டமன்றத்தை அமைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

சட்டமன்றம் அமைப்பதற்கு தேவையான இடம் குறித்து பேசுகையில், ''சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய இடம்தான். அதனுடைய வரலாறு படித்து பார்த்தேன். அந்த இடத்தையும் எடுக்கலாம். கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள், 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள் அதையும் எடுக்கலாம்'' என்றார். 

மேலும் முதலமைச்சர் எங்கு வேண்டுமானாலும் சட்டமன்றத்தை கட்டலாம் எனக்கூறிய அவர் இந்த காலக் கட்டத்திலேயே சட்டப் பேரவையை கட்ட வேண்டும் எனவும் கோரினார்.