புதிய கல்விக்கொள்கையின் நிலை என்ன..?  ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அமைச்சர்கள் ராஜினாமா குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையின் நிலை என்ன..?  ப.சிதம்பரம் கேள்வி
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், கொரோனா பெருந்தொற்றை கையாளுவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று நாள்தோறும் பறைசாற்றிய மத்திய அரசின் கூற்றுகள் மீது கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அதுமட்டுமல்லாது, கல்வித்துறை அமைச்சர், இணையமைச்சர் விலகியுள்ளதால் புதிய கல்விக் கொள்கையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளதோடு, செயல்கள் சரியாக நடைபெற்றால் அதன் பாராட்டுகள் பிரதமரைச் சாரும், அதுவே தவறாக நடந்தால் அமைச்சர்கள் மீது தான் நடவடிக்கை பாயும் என்றும் கடுமையாக சாடியுள்ளார். மேலும், இப்போதுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மூடுவிழா செய்துவிட்டு, மாநிலங்களின் உரிமையை மதிக்கும், அறிவியல் மற்றும் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சுதந்திர கல்வியை ஊக்குவிப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.