”கச்சத் தீவை மீட்பதே ஒரே தீர்வு” மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

”கச்சத் தீவை மீட்பதே ஒரே தீர்வு” மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கச்சத் தீவை மீட்பதே ஒரே தீர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் நடைபெற்ற மீனவர் சங்கம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மீன்பிடித் தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக கூறிய முதலமைச்சர், மீன்வளத் துறைக்கும் மீனவர்களுக்கு திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நலனுக்காக 10 நலத்திட்டங்களை அறிவித்த அவர், மீனவர்களின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து, எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையும் படிக்க : கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் : சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு!

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும், நாட்டுப் படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மூவாயிரத்து 700 லிட்டராக வழங்கப்படும் என்றும் விசைப்படகு மீனவர்களுக்கு 19 ஆயிரம் லிட்டர் டீசல் மானியமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

தங்கச்சிமடம், பூம்புகார், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீன் ஆய்வுக் கூடம் மேம்படுத்தப்படும் என்றும் மீனவர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி, 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 13 ஆயிரம் பேருக்கு 70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கச்சத் தீவை மீட்பதே ஒரே தீர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.