”தமிழ்நாடு அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி திமுக” - அண்ணாமலை

தமிழ்நாட்டு அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி திமுக என்று பழநியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியை அடுத்த பழைய ஆயக்குடியில் நடைபயணத்தை தொடங்கினார். புதுஆயக்குடி, சிவகிரிப்பட்டி, காலேஜ்மேடு, பஸ்நிலையம், காந்திரோடு வழியே பழனி தேரடி பகுதிக்கு வந்த அண்ணாமலைக்கு பாஜகவினர் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் 'செல்பி' எடுத்து கொண்டனர். 

இதையும் படிக்க : விடாது வெளுத்து வாங்கிய கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

பின்னர் தேரடி பகுதியில் பாஜகவினர் மத்தியில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜகவின் நடைபயணம் மிகவும் எழுச்சி பெற்றுள்ளதாகவும், எந்தக் கூட்டணி அமைத்தாலும் பாஜகவால் மட்டும்தான் லஞ்சம் இல்லாத வளர்ச்சியைக் கொடுக்க முடியும் என்றும் பேசினார். பிரதமர் மோடி வந்த பிறகு தான் ஆட்சி இயந்திரம் ஏழை மக்களின் வளர்ச்சியை நோக்கி சென்றது என்றார். முதல் 5 ஆண்டு கால ஆட்சி ஏழைகளை நோக்கியும், 2-வது 5 ஆண்டு கால ஆட்சி என்பது வளர்ச்சியை நோக்கியும் செல்கிறது என்று அண்ணாமலை கூறினார்.