இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து...காயமடைந்தவரை தோளில் சுமந்து சென்று உயிரை காப்பாற்றிய நபர்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வாகன விபத்தில் சிக்கியவர்களை, பொதுமக்கள் தோளிலும், ஸ்ட்ரெச்சரிலும் கொண்டு சென்று தக்க சமயத்தில் இருவரின் உயிரையும் காப்பாற்றினர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து...காயமடைந்தவரை தோளில் சுமந்து சென்று உயிரை காப்பாற்றிய  நபர்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெங்கட்ராயபுரம் பகுதியை சேர்ந்த முருகன்  மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வேறு மருத்துவ சேவைக்காக சென்றதாக கூறப்படுகிறது.

இதனை சற்றும் பொருட்படுத்தாத அங்கிருந்த நபர் ஒருவர் "முதல்வன் பட பாணியில்" விபத்தில் சிக்கிய நபரை அலேக்காக தோளில் சுமந்து கொண்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அதன்பின்னர் விபத்து நடத்தில் நின்ற பொதுமக்கள்  சிலர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படும் ஸ்ட்ரெச்சரை கொண்டுவந்து அந்த ஸ்ட்ரெச்சரில் விபத்தில் சிக்கிய மற்றொருவரை படுக்க வைத்து, வேகமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் விபத்தில் சிக்கி விட்டால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அந்த நேரத்தை மருத்துவர்கள் "கோல்டன் டைம்" எனக் கூறுவார்கள்.

அந்த நேரத்தின் அருமை அறிந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆம்புலன்சை எதிர்பாராமல் விபத்தில் சிக்கியவர்களை தோளில் சுமந்தும், ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் விபத்தில் சிக்கிய இருவரை காப்பாற்றியுள்ளனர். விபத்தில் சிக்கியவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் போலீசாரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.