ஆவின் பொருட்கள் விலை உயர்வு..!

ஆவின் பொருட்கள் விலை உயர்வு..!

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட சில பொருட்களுக்கு வரியை உயர்த்துவது, புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக அரிசி, கோதுமை, எல்இடி, மருத்துவமனை அறை வாடகை, வங்கி காசோலை உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றுடன் பாக்கெட் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதிக்கப்பட்ட 5% ஜிஎஸ்டி விதிகள் கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆவின் பொருட்களின் விலை உயர்வு:

இந்த நிலையில் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி, தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலை பட்டியல் படி, 100மில்லி நெய்  70 ரூபாய்க்கும், 200 மில்லி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரை லிட்டர் நெய் 290 ரூபாய் எனவும், ஒரு லிட்டர் 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

இதேபோல் 100மில்லி தயிரின் விலை 10ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படவுள்ளது. அரை லிட்டர் தயிர் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.